மக்களை திசை திருப்புகின்ற மர்ம மனிதர்கள்…..!

9 08 2011

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மர்ம மனிர்களின் வளர்ச்சிக்கு பின்புலம் யாரென தெரியாத நிலையில் மீண்டும் மக்கள் பீதியில் வாழ்கின்ற நிலை நாட்டில் உருவாகியுள்ளது. இன்னாரென அடையாளம் காணப்படாத நிலையில் தமது உடலில் கிறிஸ் எண்ணெய் பூசிய வண்ணம் மர்ம மனிதர்கள் தமது கைவரிசைகளை பொதுமக்கள் மத்தியில் பயன்படுத்தி வருகின்றனர்.


இறக்குவானை, வரிப்பத்தான் சேனை, அவிசாவளை, ஹட்டன், கொட்டகளை, பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக இடம்பெற்று வருகின்ற இச்சம்பவங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் அண்மைக்காலங்களாக பெண்களை மையப்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்ளுகின்ற மர்மமனிதர்களின் செயற்பாடுகளுக்கு அதிகம் இளம் யுவதிகளே பாதிக்கப்படுகின்றனர். உடல் முழுவதும் கிறிஸ் எண்ணெய் பூசி பெண்களின் உடலில் காயங்களை ஏற்படுத்தி அவர்களை கடத்திச் செல்ல முற்படுகின்றனர்.
ஆரம்பத்தில் இரத்தினபுரியை அண்டிய பிரதேசங்களில் வயோதிப பெண்களை பலவந்தமாக தாக்கி அவர்கள் மரணித்த பின்னர் பாலியல் பலாத்காரம் புரிந்து பின்னர் அவர்களின் உடலை பாகங்களாக வெட்டி சனநெரிசல் உள்ள பிரதேசங்களில் வைத்து சிறு விளக்கை ஏற்றி விட்டு சென்றார்கள்

எனினும் அண்மைக்காலங்களாக வயோதிபப் பெண்கள் என்ற தோரனையில் இருந்து விடுபட்டு இளம்யுவதிகளை மையப்படுத்தி இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு தினங்களில் மேபீல்ட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் முகத்தில் ஒருவகை திரவத்தை அடித்து அவரை கடத்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா லிந்துலை சலாங்கத்தை தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை கடத்த இரு சந்தேகநபர்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.


இதேவேளை இன்று (09.07.2011) இச்சம்பவத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பெண் கொடுரமாக கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை பீதியில் உறைந்து இருக்கின்ற மக்களின் முறைப்பாடுகளுக்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இவ்வாறான கொடுர செயற்பாடுகளுக்கு பின்விளைவு என்ன என்பதற்கும் அப்பால் அரசாங்கம் அல்லது பாதுகாப்பு படையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை புரியாத புதிர் தான் என்றாலும். இச்செயற்பாடுகளுக்கு பின்புலம் அரசாங்கம் தான் செயற்படுகின்றது என்ற மக்களின் ஏகோபித்த கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
பொதுமக்களாhல் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் இறக்குவானை பிரதேசத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் மற்றையவர் மனநோயாளி எனவும் பொலிஸார் காரணங்களை முன்வைத்துள்ளனர். இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் மக்களால் பிடிக்கப்பட்ட ஒருவர் பொதுமக்களின் தாக்கலில் இலக்காகி பலியாகியுள்ளார்.
பொதுமக்களின் அன்றாட சேவைகளை முடக்கி அவர்களை திசை திருப்ப முயற்சிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் நோக்கமாக கருதப்படுகின்றது. யுத்தம் முடிந்து மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகின்ற மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தீர்க்கமான தீர்வு எட்டப்பட வேண்டியது காலத்தின் தேவையே!

Advertisements
தமிழ் மக்களின் எதிர்கால இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டியது! புலம்பெயர் சமூகமே

22 07 2011


இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பின் முதலாவது ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக 1983 கறுப்பு ஜூலைப் படுகொலைகள், இதன்; உச்சகட்டமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் திகழ்ந்துவருகின்றது. 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையே இச்சம்பவத்திற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புயலுக்குப் பின் அமைதி என்று கூறுவார்கள் அதேவண்ணம்  நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழலின் பின் தமிழ் சமூகம் அமைதியை நாடி இருக்கும் இத்தருணத்தில்  பிரித்தானியா , ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகளில்  நாளைய தினம் யூலை இனக்கலவரத்தை புலம்பெயர் சமூகம் மீண்டும் சல்லடை போடும் முகமாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க உள்ளது.

உறவுகளை பிரிந்து உடைமைகளை இழந்து எனைய நாடுகளில் தஞ்சம் கோரி தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்ற எம் உறவகளின் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றாலும் இலங்கையில் மிஞ்சியுள்ள தமிழ் சமூகம் இனிமேலாவது தமது இருப்பிடங்களை உறுத்திப்படுத்தி வாழ புலம் பெயர் சமூகம் காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் சமூகம் தமது ஆர்ப்பாட்டங்களை இன்றும் வெளிசமூகத்தில் முடக்கி விட்டு வேடிக்கை பார்க்கின்றது. வெளிநாடுகளில் இருந்து அரசியல் அபிலாசைகள் , இனப்படுகொலைகள் , தமிழ் ஈழம் என மார்தட்டும் இவர்களின் செயற்பாடுகளினால் மேலும் மேலும் பாதிக்கப்படுவது இலங்கையில் வாழும் தமிழ் சமூகம் தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இதே 28 வருடங்களுக்கு முன் தமது சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.

வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.
83 ஆண்டு கலவரத்தை தொடர்ந்து சென்னையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இதுபோன்ற இனப்போராட்டங்கள் ஏற்படாதிருக்க தாம் செயற்படுவோம் என உறுதியளித்திருந்தார் எனினும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்தியாவின் உதவியுடனே வெல்ல முடிந்துள்ளது என அரசு தெரிவித்திருந்தமையும் சிந்திக்க வேண்டியதே!
இது வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், படுகொலைகள் , வன்முறைகள் என எதினாலும் தமது உயிருக்கு கூட உத்திரவாதம் கிடைக்கப்பெறாத தமிழ் சமூகத்திற்கு இனியும் அவ்வாறான ஒரு சூழ்நிலை வேண்டியதில்லை எனலாம்.

கறுப்பு யூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், எஞ்சியுள்ள தமிழினம், தம் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கின்ற ஒரு காலமாக இக்காலம் அமைய புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள், ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களின் ஸ்திரமான வாழ்க்கைக்கும் அவர்களின் எதிர்கால சமூகத்திற்காகவும்  பணியாற்ற வேண்டும் என்ற உறுதிமொழிகளை, கறுப்பு யூலை தினத்தில் கனத்த நினைவுகளுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையே!

13 ஆவது அரசியல் சீர்திருத்தம் -தமிழ் மக்களின் எதிர்கால இருப்பிடம் -65 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

22 07 2011

சர்வதேச நாடுகளின் அவதானத்தை பெற்றுள்ள வடக்கு கிழக்கு  65 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் தமிழ் சமூகம் அனுபவித்த கசப்பான அனுபவங்களை மீண்டும் கழுவ முயற்சிக்கும் ஒரு உத்வேகம் எனலாம்.

13 ஆவது அரசியல் சீர்திருத்தம் என்ற போர்வையில் 65 உள்ளுராட்சி மன்றங்களில் 01 மாநகர சபை 09 நகர சபை 55 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றன. 2,226 வாக்களிப்பு நிலையங்களில் 2,630,985 வாக்காளர் வர்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 60,443 தபால் மூல வாக்காளர்களும் உள்ளடங்குகின்றனர்.

5,688 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அதேவேளை  875 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 20 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதுடன் 72; சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

பல இலட்சக்கணக்கான தமிழ் உறவுகள் தமது அனைத்து அபிலாசைகளுக்கும் அப்பால் சிக்குண்டு சிதறிய அந்த நாள் இதேபோன்று 28 வருடங்களுக்கு முன் இடம்பெற்றது. கடந்த 2 தசாப்தங்களின் பின்னர் நாளை இடம்பெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தமிழ் மக்கள் மத்தியில் கறைபடிந்திருக்கும், பிரிவின் வேதனைகளை இழப்பின் இடைவெளிகளை மீண்டும் நிரப்புமா என்பது கேள்விக்குறி தான்!

கொழும்பில் அரசாங்கத்தை நிர்வகித்து சமமாக நல்லாட்சி செய்யவேண்டியவர்களும் தமிழர்களின் பிரதிநிதிகள் என்னும் போர்வையில் அரசியல் பிரவேசத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டர்களும் தேர்தல் வெற்றியை மட்டுமே முகாமிட்டுள்ளனர் என்பது ஐயமில்லை. என்றாலும் இத்தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த தமிழ் மக்கள் எந்தளவு ஆர்வம் கொண்டுள்ளனர் என்றால் அது பூச்சியம் தான்.

கடந்த 30 வருடங்களாக அகதிகளாக்கபட்டு , அனாதைகளாக்கப்பட்டு , தமது சுயமரியாதையை இழந்து வாழ்ந்த வடக்கு கிழக்கு தமிழர்கள் இன்றும் தமது நிரந்தர வாழ்க்கைக்கான ஒரு அத்திவாரத்தை தனும் போட முடியாத நிலையில் இடம்பெறுகின்ற இத்தேர்தல் நடவடிக்கைகள் மேலும் இத்தமிழ் மக்கள் மறக்க ,மறைக்க நினைக்கும் தமது சுய உரிமை போராட்டத்தை கிளறிவிடும் செயல் என்றே கூறலாம்.

தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பலவும் தமிழ் மக்களை பகடைக்காய்களாக வைத்து தமது அரசியல் இலாபங்களை பெற்றுக் கொள்கின்ற அதேவேளை அவர்கள் இதுவரை மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளின் பிரதிபலன் தான் என்ன?
இன்றும் 600க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவும் இன்றி 15 வருடங்களுக்கு மேலாக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற வேண்டிய இன்னும் எத்தனை இளைஞர்; யுவதிகள் ? தமிழர் பிரதேசங்களில் வெறுமனே 5000 ரூபாயுடன் இடம்பெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ? போன்ற இன்னோரண்ண செயற்பாடுகள் பல பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன.

13 ஆவது அரசியல் சீர்திரத்தம் மாத்திரமன்றி கிராமிய மட்டங்களிலும் காணி , வாழ்விடம் , கலாசாரம் போன்ற தமது அடிப்படை உரிமை வசதிகள் எதுவும் இன்றி தமது சொந்த இடங்களிலே 5 வருடகால ஒப்பந்த அடிப்படையில் தமது வாழ்க்கையை மீள ஆரம்பித்திருக்கும் வடகிழக்கு தமிழ் மக்களின் எதிர்கால இருப்பிடத்திற்கு நாளைய தினம் தெரிவுசெய்யப்பட இருக்கும் உள்ளுராட்சி பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தான் எதுவாக இருக்கும்?!.,

மட்டக்களப்பு மரபும் பேரா.சிவத்தம்பியின் பங்களிப்பும்

11 07 2011

தமிழ்த்துறை ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் , மேடை நடிகர் , வானொலி நடிகர் , எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஆற்ற முடியாத தனது வெற்றிடத்திற்கு பலரை உருவாக்கி இன்று அக்னியுடன் சங்கமமாகியுள்ளார். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.


ஆரம்பத்தில் ஒரு நாடகக் கலைஞராக அறியப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது. ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் பல கதாபாத்திரங்களிலும் தடம் பதித்தவர்.

ஈழத்தின் வடபால் பிறந்த பேராசிரியர் சிவத்தம்பி இவருக்கும் மட்டுமா நகருக்கும் இடையிலான தொன்மைத் தொடர்புகளை மீண்டும் மீட்டிப்பார்க்க வேண்டிய காலகட்டம் இது!

பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் மௌனகுரு இவர்களுக்;கு எல்லாம் பின்புலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். தவிர ‘மட்டக்களப்பு’ தனக்கே உரித்தான மரபு வழி நாடகங்கள், கூத்துக்கள் ,மத்தள ஒலி, சலங்கை ஒலி, இவைகள் தேசமெங்கும் படர வழிசமைத்தவர் எனலாம்.

காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த பேராதனை மண்ணிலே மட்டக்களப்பின் கூத்துக்களை நாடக வடிவில் அரங்கேற்றிய ஆரம்ப கர்த்தா இவரே.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலே 2 வருடங்கள் பணியாற்றய அவர் பணியாற்றிய காலங்களில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முக்கியமான பாட விடயங்களைத் தொடங்குவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார் குறிப்பாக உயர்பட்டப் படிப்புக்கள், கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி ஆகிய கற்கைநெறிகளைத் திட்டவரைபை தொடங்குவதற்கு ஆரம்பகர்த்தாவாக செயற்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார்.

மூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளையும் நிகழ்த்தினார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை  அளித்தார். கூடவே அவரால் மட்டக்களப்பிற்கு பயணிக்க முடியாத  காலகட்டத்தில் மாணவர்கள் கொழும்புக்கு சென்று கற்கை நெறிகளை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக 7-19; நூற்றாண்டு வரையில்  தமிழின் மிக அதிகமான பங்களிப்பாக உள்ள சமய இலக்கியங்கள் ஒரு பாசுர மரபில் உருவான ஒரு மனித நேய மரபு என்பதை ஒரு தத்துவ உரையாடலாக உருவாக்கியது தான் மெய்கண்ட சாஸ்திரங்கள் என்று அவர் எழுதியிருக்கின்றார். ஒரு சமயத்தை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ததில் பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கே மிக முக்கியமான பங்களிப்பு உண்டென்று நான் கருதுகின்றேன்.

தவிர புதிதாக உருவான அச்சு ஊடகப் பண்புகளையும், அதன் மூலம் உருவான வாசிப்புப் பழக்கத்தையும் அந்தப் பழக்கத்தினூடாக உருவான புதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு 20 ஆம் நூற்றாண்டில் உருவான புனைகதைகளினூடாக நாம் கண்டுகொள்ளலாமெனவும் பேராசிரியர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.

2300 ஆண்டு கால தமிழ்ச்சமூகத்தின் தொடர்ச்சியான வரலாற்றை கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ச்சமூகம் ,பின்னர் சமய மேலாதிக்கம் மிக்க சூழலில் சமயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படிப்புரிந்து கொள்வது என்பது பற்றிய ஆய்வாகவும், புதிய மறுமலர்ச்சி சார்ந்து, புதிய தன்மையில் உருவான 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய பண்புகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்துள்ள ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் 1956 தொடக்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ச்சமூகம் விதந்து பாராட்ட வேண்டிய ஒரு மிக முக்கியமான செயல் எனலாம்.

பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கப்பால் மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கிய உலகிலே பல பாத்திரங்களில் இயங்கி வந்த போரா.சிவத்தம்பி அவர்களின் மறைவு ஆற்ற முடியாத ஒரு இடைவெளி என்றாலும் அவர் தமிழ் வரலாற்றிற்கு ஆற்றிய பங்களிப்பு என்றும் காலத்தால் அழயாது.

‘முதுதமிழ் நிலம்’ குமரிக் கண்டத்தின் மற்றொரு பாகம் இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்கள்?

9 03 2011

கடற்கோள் என்பது தமிழர்தம் தொன்மை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சொற்றொடர். நிலவியல் நிபுணர்கள் கூற்றுப்படி மடகஸ்கார், இலங்கை, இந்தியா உட்பட டெக்கான் பள்ளத்தாக்கு வரையிலான பிரதேசம் ஒரே நிலத்தொகுதியாக இருந்ததென்றும் அது லெமூரியா கண்டம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். தமிழ் இலக்கியத்தில் இது குமரிக்கண்டம் எனப்படுகின்றது.

அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழக் ஆராய்ச்சிக் குழுவினர் கொன்ட்வானா என்ற பெயரில் இலங்கை நாடு மடகஸ்கார் தொட்டு அவுஸ்திரேலியா வரை பரந்து இருந்ததாகவும். இப்போதைய இலங்கைத்தீவு அதன் ஒரு சிறுபகுதி என்றும் தெரிவிக்கின்றனர்.

தவிர மாலைதீவு மற்றும் இலட்சத்தீவுத் தொகுதிகளின் விலங்கியல் மற்றும் புவியியல் என்ற நூலை எழுதிய ஜே.எஸ்.கார்டினர், ||இலங்கை, மடகஸ்கார், மாலைதீவு ஆகியவை முன்னொருகால் இணைந்திருந்தன|| என்கிறார்.

மாற்றம் என்பதே மாறாத விதி என்ற நியதிக்கு அமைவாக இந்த இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இலங்கைப் புதைபடிவ திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ்.யூ.தெரனியகலவின் ஆய்வுகளின்படி கடற்கரையோரத்தில் காணப்படும் சரளைக் கற்கள் இலங்கையின் கீழ்ப்புறத்தே புந்தல பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 15மீற்றர் உயரத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளன. இவை 125,000 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்று காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன் மிகவும் பழைமைவாய்ந்த கடலோர சரளைக்கற்கள் மாங்குளத்தில் காணப்படுவதாகவும், அவை கடல் மட்டத்திலிருந்து 60 தொடக்கம் 80 மீற்றர் வரையிலான உயரத்தில் இருக்கின்றன எனினும் தான் இப்படிவத்தைக் காலக்கணிப்புச் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2004 டிசெம்பர் 26 சுமாத்திரா தீவின் ஆச்சே மாநிலத்திற்கு அருகாமையில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 9 றிச்ரர். இதிலும், இலங்கையின் கிழக்கு, தெற்குப் பகுதிகளைத் தாக்கிய அலைகள் 1400 கி.மீ தூரத்தைக் ஒன்றரை மணிநேரத்தில்  கடந்து வந்துள்ளன என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

டிசெம்பர் 26 ஆம் திகதி சுனாமி அலை 600 கி.மீ தூரத்தை 75 நிமிடங்களில் கடந்தது. இது மணிக்கு 480 கி.மீ என்று அளவிடப்படுகிறது. கடலின் ஆழமான பகுதிகளில் சுனாமி அலைகளின் உயரம் அசாதாரணமாக இருப்பதில்லை. கடலில் பயணிக்கும் கப்பல்களின் கீழால் சுனாமி அலைகள் செல்வதைக் கப்பலில் இருப்போர் அவதானிக்க முடியாது.
தவிர அதிகம் உணரப்படும் சுனாமி அலைகள் பசுபிக் கடலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு 24 மணிநேரத்தில் முன்னோக்கிச் செல்லும் வேகம் உடையது.

அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சிக் கழகம் (ருளு புநுழுடுழுபுஊயுடு ளுருசுஏநுலு) வெளியிட்ட தரவுகளின்படி வருடமொன்றுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான புவிநடுக்கங்கள் இடம்பெறுகின்றன. நாளொன்றுக்கு 8,000 புவிநடுக்கங்கள் என்ற விகிதத்தில் இவை கணக்கிடப்பட்டுள்ளன. புவிநடுக்க அளவீட்டை 1935 இல் சாள்ஸ் றிச்ரர்; என்ற அமெரிக்கப் புவியியல் விஞ்ஞானி உருவாக்கினார்.

மனிதநேயத் தலையீடு என்ற புதிய சர்வதேச அரசியல் கோட்பாடு இவ்வாறான இக்கட்டான சூழல்களில் கைகொடுக்கும் வகையில் தனது 3அம்ச முக்கிய கோட்பாடுகளை கொண்டுள்ளது.
எந்தவொரு நாட்டில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடக்கின்றனவோ,
எந்தவொரு நாட்டில் அரச நிர்வாகம் முற்றாகச் சீர்குலைந்து பாரிய குழப்பமும் மனித அவலமும் நிகழ்கின்றதோ
இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்பும் பாரிய அழிவுகளும் நடைபெறுகின்றனவோ அவை தனியொரு நாட்டின் விவகாரம் அல்ல.
உலகநாடுகளின் பொது விவகாரம் என்பதால் பாதிக்கப்பட்ட நாட்டிற்குள் மனிதநேயப் பணியாற்றும் நோக்கில் உட்பிரவேசிக்கும் உரிமை உலகநாடுகளுக்கு உண்டு.

கடலில் மூழ்கிய முதுதமிழ் நிலமான குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகள் முழுமை பெறாதிருப்பது கவலைக்குரியது. என்றாலும் 2004 ஆம் ஆண்டு சுனாமியாலும் அதன் முன்,பின் ஏற்பட்ட யுத்த சூழலாலும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தீவின் வடகிழக்கு பிரசேதங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மனிதநேயத் தலையீடுகளினால் இதுவரை புணர்நிர்மானம் செய்யப்படவில்லை என்பதும் கவலைக்குரியதே.

குமரிக்கண்டம் போன்று தமிழர் தம் வாழ்வையும் சாவையும் பறைசாற்றும் இலங்கையின் வடகிழக்கு மக்களின் ஏகபோக உரிமையையும் தேவைகளையும் பூர்த்தி செய்வது காலத்தின் தேவையல்லவா?

‘மழை’உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

10 01 2011

மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

என்ற பாரதியாரின் வசன கவிதைகளின் 10 ஆம் பாகத்தின் அடிப்படையில் தான் இன்று இலங்கையின் கிழக்கு மாகாண மக்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து பெய்யும் இடி மின்னல் உடன் கூடிய அடைமழை காரணமாக இலங்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி மாவட்டத்தில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த  31112 பேர் 132 தற்காலிக முகாம்களில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் வீடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் கிராம சேவையாளர்களும் பொது  அமைப்புகளும் செய்து வருகின்றன. நேற்றுக்காலை முதல் இன்று காலை வரை 312 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து 05 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்றும் வாநிலை அவதான நிலையம் அறிவித்தள்ளது தொடர்ந்தும் மழை பெய்து வருவதனர்லும் வெள்ளம் வீதிகளினை மூடியுள்ளதாலும் பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள் கூட சில பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், பல பிரதேசங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல  முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கிழக்குப் பிரதேசத்திலிருந்து அங்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் கிடைத்த போதும் ஏனைய பகுதிகளிலிருந்து விபரங்கள் கிடைக்கப் பெறுவதில் சிக்கல் உள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்தது.
குறிப்பாக படுவான்கரையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் விபரங்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகள் பிரதேசங்களில் உடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உன்னிச்சைக் குளத்தின் 3 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ள போதும் அணைக்கட்டின் மேலாக 3 அடிக்கு மேல் நீர் பாய்வதாக பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
நவகிரி குளத்தின் கதவுகள் யாவும் திறந்து விடப்பட்டுள்ன. அப்பிரதேசத்துக்குச் செல்ல முடியாதளவுக்கு பிரதேசம் நீரால் மூடப்பட்டுள்ளதுடன்  உறுகாமம் குளத்தின் நீர் மட்டமும் அதிகமாகியுள்ளது.

படுவான்கரைக்கான பட்டிருப்பு வீதி, ஓந்தாச்சிமடம் – மகிழுர் வீதி, அம்பிளாந்துறை – குருக்கள் மடம் வீதி, என்பன பாதிக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வலையறவு பாலம் நீரில் மூழ்கியுள்ளதனால் வவுணதீவு- மணல்பிட்டி வீதி, ஆயித்தியமலை- கரடியனாறு வீதி வவுணதீவு- கரவெட்டி வீதி, வவுணதீவு மணல்பிட்டிவீதி, பன்சேனை பிரதேசங்களுக்கான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக படுவான்கரை பிரதேசத்துக்கான அனைத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளன.

வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மயிலங்கரச்சி நாசிவந்தீவு வீதி நீரில் மூழ்கியுள்ளதனால் அக்கிராமத்துக்கான போக்குவரத்து முற்றாகப் பாதிகக்ப்பட்டுள்ளதுடன், நிவாரணப் பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.

மதுறு ஓயா குளம் திந்து விடப்பட்டுள்ளதனால் கிரான் பிரதேச செயலகப்பிரிவில் கிரான் பாலம் ஊடாக நீர் அதிகளவில் பாய்வதால் அவ்வீதியுடான போக்குவரத்தும் முற்றாகப் பாதிகக்பட்டுள்ளது.

வாகரைப்பிரதேசத்தின் தோணிதாட்டமடு, கிரிமிச்சை, மதுரங்கேணிக்குளம், பனிச்சங்கேணி ஆற்றின் ஊடாக போக்குவரத்தக்கு இயந்திரப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.  தொப்பிக்கல, ஈரளக்குளம், முறத்தானை, சித்தாண்டி, சந்திவெளி, களுவனகேணி, பிரம்படித்தீவு, பொண்டுகள்சேனை, முறாவொடை, வாழைச்சேனை, கல்மடு, கல்குடா, கும்புறுமூலை வெம்பு, சுங்காங்கேணி, கிண்ணையடி உள்ளிட்ட பிரதேசங்கள் முழுதாக நீரில் மூழ்கியுள்ளன.

பிரதேசங்களில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அனைவருக்கும் சமைத்த உணவுகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட:டுள்ளதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த நிவாரண அவசரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதுடன். பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, சித்தாணடி, செங்கலடி, ஐயங்கேணி, முறக்கொட்டாஞ்சேனை, பலாச்சோலை, உள்ளிட்ட பிரசங்களில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதனால் அப்பிரதேசங்களில் குடிநீர்வினியோகம் , நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை , ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் 05 நாட்களுக்கு மூட நடவடிக்கை எடுத்துள்ளதுடன். கிழக்கு பழ்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜஸ்வர்யம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். ‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய விதி.
சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி. எனும் கூற்றிற்கிணங்க இது வரை 20 இற்கும் அதிகமான மக்கள் இறந்து போயுள்ளதுடன் அதிகமானவர்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா?கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?
ஏன்ற வண்ணம் இலங்கையின் தலை நகரில் இப்போது கொஞ்சம் வெளித்திருக்கிறது. எனினும் இதுவும் நீண்ட சேரம் நிலைக்காது போலுள்ளது. மீண்டும் ஞாயிறு தன் காதலியுடன் உறவு கொண்ட இடுத்த சில நொடிகளுக்குள்ளே அவர்கள் இருவரும் இணைந்து உலகவாழ் மக்களுடன் விளையாடுகின்றனர் போலும் மீண்டும் அந்த புளித்த நாற்றம் கொண்ட உடைகளை அணிந்து கொண்டு மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கையில் மீண்டும் தமது விளையாட்டை தொடங்கி விட்டாள் ஞாயிறின் சக்காளத்தி.

‘தமிழில் தேசிய கீதம் பாடுவது நகைச்சுவை’ சிறுபான்மை இனத்தின் மீதான இலங்கை அரசின் மனிதாபிமான நெருக்கடி

14 12 2010

ஓவ்வொரு தனி மனிதன் அல்லது ஒரு சமூகம் தமது தாய் நாட்டின் மீதிருக்கும் தேசிய உணர்வை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டதே தேசிய கீதம். இவை எந்த மொழியில் பாடப்பட வேண்டும் என்பது தொடர்பில் இது வரை காலமும் எந்த வொரு நாட்டிலும் கொள்கைகளோ அல்லது சட்ட வரையறைகளோ இல்லை.


எல்லா விடயங்களிலும் ஏனைய நாடுகளை விட வழமைக்கு மாறாக செயற்படும் ஜனாதிபதி மஹிந்த அவர்களும் அவரது அமைச்சரவையும் வினோதமான வழக்காறுகளை இனம் மதம் மொழி சமூகம் தாண்டி தற்போது தேசிய கீதத்திலும் புகுத்தி விட்டனர். மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலகட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணித்து தமிழ் மக்களை அவர்களது கலாசாரத்தினை திட்டம் இட்டு படுகொலை செய்யும் செயற்பாடாகும்.

இலங்கையில் பெரும்பான்மை மக்களின் அடுத்த மொழியாக தமிழ் மொழியே உள்ளது. தமிழ் இனம் என்பதையும் தாண்டி தமிழ் மொழி என்பது தான் இலங்கையில் தமிழர்கள் தவிர்ந்த முஸ்லிம் , பறங்கி இனத்தவர்களுக்கும் புழக்கத்தில் உள்ள ஒரு மொழியாகும்.

இந்தியாவில் தேசிய கீதம் இந்தி மொழியில் எழுதப்பட்டு அதே மொழியிலேயே பாடப்படுகின்றது ஆகவே எமது தேசிய கீதமும் சிங்களத்தில் அமைய வேண்டும் என உதவாக் கரை காரணம் ஒன்றையும் எமது தலைமைத்துவம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் என்ற நிலையிலும்.  தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவில் வங்காள மொழியில் தான் தேசிய கீதம் உள்ளது. ரவீந்திரநாத் தாகூர் என்ற சிறுபான்மை வங்காள இனத்தை சேர்ந்த ஒருவரே இந்தியாவின் தேசிய கீதத்தினை எழுதியுள்ளார்.  அது சரி சொந்த வீட்டில் என்ன நடக்கின்றது என்பது கூட அறியாது இருக்கும் எமது தலைமைத்துவங்களுக்கு எதிர் வீட்டு விவகாரங்கள் மட்டும் தெரிந்திருக்குமா என்ன?

எமது நாட்டைப் போன்று யுத்த சீரழிவுகள் அங்கு பாரியளவில் இடம் பெறாத காரணத்தினாலும் இந்தி மொழிப்பாவனை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற காரணத்தினாலும் தான் அங்கு ஹிந்தி மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. ஆங்கெல்லாம் தேசிய கீதம் பாடுவதும் கேட்பதும் வரப்பிரசாதமாக ஏற்று அதற்குரிய மரியாதை  வழங்கப்படுகிறது.

எமது நாட்டில் ஜனாதிபதி பதவி ஏற்கவும் அமைச்சரவை பதவி ஏற்கவும் பாராளுமன்றத்தில் அவர்கள் நடனம் ஆடவும் பாராளுமன்ற அவையை குழப்பவும் என ஒரு வினோத பாடலாக அல்லவா தேசிய கீதம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் தலைமைத்துவமே நாட்டின் மீது உணர்வற்ற தன்மையில் இருக்கும் போது அதனை எந்த மொழியில் பாடினால் தான் என்ன?

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது நகைச்சுவை என கூறிய விமல் வீரவன்ச உள்ளிட்ட தலைவர்களுக்கு சிங்களத்தில் தமது மொழியில் முழுமையான தேசிய கீதம் தெரியுமா என்ன?

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7ஆம் அட்டவணை 3இல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு 1988 ஆம் ஆண்டு தான் தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டச் செய்யும் வண்ணம் ‘சிங்கள தேசிய கீதம்’ என்ற கொள்ளைக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகவும் பழமையான தேசிய கீதம், ஜப்பான் நாட்டின் தேசிய கீதமாகும். 4 வரிகள் மட்டுமே உள்ள இந்த தேசிய கீதம் 9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும். ஜப்பானின் வரலாற்றில், அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டாலும், தேசப்பற்றுள்ள ஜப்பான் தமது தேசிய கீதத்தில், எந்தவித மாறுதலையும் செய்யவில்லை.

இரண்டு உலகப் போர்களில் பங்கு பெற்ற நேரங்களிலும், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டால், அடியோடு தகர்க்கப்பட்ட போதும், ஷிண்டோ, புத்த சமயம் என பிரிவுகள் இருந்தாலும், அவற்றுக்கென வழிபாட்டு பாடல்கள் இருந்தாலும், ஜப்பானியர்கள் தங்களின் பழமையான தேசிய கீதத்திற்குத் தான், மிகவும் முக்கியத்துவம் தருகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே, ஜப்பானில் தேசிய கீதம் கற்றுத் கொடுக்கப்படுகின்றது.

தவிர கனடாவில் மூன்று மொழிகளிலும், சுவிஸ்ஸர்லாந்தில் நான்கு மொழிகளிலும், தென் ஆபிரிக்காவில் ஐந்து மொழிகளிலும் என தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.