சோசலிச சக்திகள் மீண்டும் உலகஅரசியல் அரங்கின் மைய சக்திகளாக மாறி வருகின்றன!

11 05 2010

கனடிய தமிழர் ஜனநாயக விழிர்புணர்வு மன்றம், மே 01 ஆம் திகதி, கனடா ஸ்காபரோ நகரில் நடாத்திய மே தினக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, இலங்கை மார்க்சிச – லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வடபிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம் நிகழ்த்திய உரை கீழே தரப்படுகின்றது.

தலைமைத் தோழர் அவர்களே! வருகை தந்திருக்கும் தோழர்களே! நண்பர்களே!

உலகத் தொழிலாளி வர்க்கத்தினதும், உழைக்கும் மக்களினதும் உன்னத தினமான, புரட்சிகர மேதினத்தை நினைவுகூருமுகமாக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த தினத்தை நினைவு கூரும் இவ்வேளையில், நாம் வழமையாக அடிக்கடி பேசுகின்ற தேசியம், ஜனநாயகம், பெண்ணியம், தலித்தியம் போன்ற மக்கள் எதிர்நோக்கும் இன்னோரன்ன விடயங்களை, தற்காலிகமாக சற்று ஒதுக்கி வைத்துவிட்டு எனது உரையைத் தொடரலாம் எனக் கருதுகின்றேன்.

உலகம் இன்று ஒரு பெரும் மாற்றக் காலகட்டத்தினூடாகச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சோவியத் யூனியனிலும், இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையிலிருந்த சோசலிச அரசுகள் வீழ்ச்சி கண்டபின்னர், உலகில் சோசலிச அமைப்புமுறை முற்றுமுழுதாக வீழ்ச்சி கண்டுவிட்டதாகவும், அந்த அமைப்பு காலத்துக்குப் பொருத்தமில்லாத காலாவதியான ஒன்று எனவும், முதலாளித்துவ தத்துவவாதிகளும், அவர்களது பிரச்சார ஊடகங்களும் உரத்துப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். அதன் காரணமாக, உலகின் முதல்தரமான ஏகாதிபத்தியமான அமெரிக்காவின் கோடியில் அமைந்துள்ளதும், சோவியத் யூனியனின் ஆதரவில் பெருமளவில் தங்கி நின்றதுமான, சின்னஞ்சிறு சோசலிச கியூப அரசு தன்பாட்டிலேயே வீழ்ச்சி கண்டுவிடும் எனவும், அவர்கள் எதிர்வு கூறவும் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் கூறியது போல அல்லது எதிர்பார்த்தது போல நடந்ததா? இல்லவே இல்லை.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகின் தனியொரு ஒற்றை வல்லரசாக தன்னை நிலைநிறுத்த அமெரிக்கா எடுத்த அத்தனை முயற்சிகளும் இன்று தோல்வியில் முடிந்துள்ளன. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொரிய யுத்தத்திலும், வியட்நாம் யுத்தத்திலும், அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் எவ்வாறு தேவையில்லாமல் தலையிட்டு, அந்த நாடுகளின் மக்களால் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்களோ, அதேபோல கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தலையிட்டு, சேற்றில் சிக்கிய நிலையில் இன்று தவிக்கின்றன. மறுபக்கத்தில், கியூபாவை அவர்கள் அழிக்க எடுத்த சகல முயற்சிகளும் கூட தோல்வியையே தழுவிக் கொண்டுள்ளன. கியூப அரசு தனது சொந்த மக்களினதும், சர்வதேச சோசலிச சக்திகளினதும் பலத்தில் தங்கிநின்று, தனது உன்னதமான சோசலிச பொருளாதார முறைமையைப் பலப்படுத்தி, தன்னை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்திக் கொண்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, தென்னமரிக்கக் கண்டத்தில் இன்னொரு கியூபாவாக ஹியூகோ சாவேஸ் தலைமையிலான வெனிசூலாவின் முற்போக்கு அரசு, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒரு பெரும் சவாலாக எழுந்து நிற்கின்றது. அதுமட்டுமா? வெனிசூலாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஒரு டசினுக்கும் மேற்பட்ட தென்னமரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில், ஏகாதிபத்திய சக்திகளின் சகல சதி சூழ்ச்சிகளையும் முறியடித்து, மக்கள் ஆதரவுடன் தேர்தல்களில் வெற்றி பெற்ற முற்போக்கு அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இன்னொருபுறத்தில,கிழக்கில் மாபெரும் சீன தேசம் மகத்தான புரட்சியாளர் மாஓசேதுங் அவர்களின் அடிச்சுவட்டில் பயணித்து, ஏகாதிபத்தியவாதிகளின் சகல சதி, சூழ்ச்சி, சீர்குலைவு நடவடிக்கைகளையும் முறியடித்து, உலகின் மாபெரும் சோசலிச மலையாக எழுந்து நிற்கின்றது.

2020ம் ஆண்டளவில் சீனம், உலகின் தற்போதைய முதல்நிலை வல்லரசான அமெரிக்காவை சகல விடயங்களிலும் விஞ்சிவிடும் என, ஏகாதிபத்தியவாதிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மறுபக்கத்தில் பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் சுமார் 40 ஆண்டுகால ஆக்கிரமிப்புகளை வெற்றிகரமாக முறியடித்து, தென்வியட்நாமை அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து 1975இல் விடுதலை செய்த வியட்நாமின் சோசலிச அரசு, நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தி, இன்று பல துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகின்றது.

1950இல் சோசலிச வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முறியடித்த வட கொரிய மக்கள், இன்றும் அச்சக்திகள் மேற்கொண்டுவரும் வரும் நாசகார செயல்களை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து, தமது நாட்டை அணுபலம் கொண்ட ஒரு நாடாகக் கட்டியெழுப்பியுள்ளனர்.

இன்னொரு பக்கத்தில், உலக முதலாளித்துவ அமைப்பு முறையானது, 1930களில் எதிர்நோக்கியதைவிட, மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் இன்று சிக்கித் தவிக்கின்றது.

ஏகபோக முதலாளித்துவ பகாசுரக் கம்பனிகளின் திட்டமிடப்படாத மிதமிஞ்சிய உற்பத்தியும், பல வளர்முக நாடுகள் எடுத்துவரும் தற்காப்பு பொருளாதார நடவடிக்கைகளும் சேர்ந்து, முதலாளித்துவ பொருளியல் அமைப்பில் உருவான பொருளாதார சுருக்க நிலை அல்லது நெருக்கடி அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது. இந்த நாடுகளின் நாணயங்கள் மதிப்பிறங்கிச் செல்கின்றன.

தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தொழில் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விலைவாசி உயர்ந்து செல்கின்றது. சமூக நலத்திட்டங்கள் வெட்டப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அவல நிலையில் இருந்து தப்பிப்பதற்கு, சர்வதேச முதலாளித்துவம் வழிவகை தேடி அலைந்து திரிவதை வெளிப்படையாகக் காணக்கூடியதாகவுள்ளது.

முதலாளித்துவ நாடுகளிலுள்ள அவர்களது பொருளாதார விற்பன்னர்கள், இதுசம்பந்தமாக ஏராளமான ஆலோசனைக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றனர். இதில் ஒரு வேடிக்கையான அம்சம் என்னவெனில், சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள ஏகாதிபத்திய உலக வங்கியின் நிர்வாகிகள், பிரெஞ்சு சோசலிச பொருளாதார அறிஞர்கள் சிலரை அழைத்து, அவர்களது விரிவுரைகள் மூலம், மார்க்சிய அடிப்படையில் இன்றைய தமது பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் என்னவென்பதைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

இதன் நோக்கம் அவர்கள் சோசலிச பொருளாதார முறைமையை ஏற்றுக் கொள்வதற்கானது என்றாகிவிடாத போதிலும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து தவிர்க்க முடியாதபடி பாடம் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அதேவேளையில் ஜேர்மனியில் உள்ள பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்று, நீண்ட நாட்களுக்குப் பின்னர், அண்மையில் மார்க்சிய மூலவர்களான கார்ல் மாக்ஸ், பிரெடரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் பொருளாதார ஆய்வு நூல்களை மீள் பிரசுரம் செய்த போது, அந்த நூல்களின் பிரதிகள் மிகச் சொற்ப நாட்களிலேயே பல்லாயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந்துள்ளன.

முதலாளித்துவம் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும், அதன் விளைவாக தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் கிளர்ச்சியில் ஈடுபட நேரிடும் என்பதையும், விஞ்ஞானபூர்வமாக விளக்கும் இந்நூல்களை, சோசலிஸ்ட்டுகள் மட்டுமின்றி, பூர்சுவா பொருளியலாளர்களும் வாங்கிப் படிப்பதில் அதிக அக்கறை காட்டி வருவதையே, இந்த அமோக விற்பனை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த இன்றைய உலக நிலைமைகளை அவதானிக்கையில் தான், மேதினத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய சர்வதேச அளவிலான தாக்கத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் ஒரு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடாத்திய தொழிலாளர்களே, இந்த அழியாப்புகழ் வாய்ந்த மேதினத்தின் சிற்பிகள் ஆவர். அன்று அமெரிக்க மண்ணில் நிலவிய மிக மோசமான தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மாற்றியமைக்கக் கோரி, சிக்காக்கோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலும், வீதி ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கிப் போராடினர்.

அவர்களில் பலர் அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் தினசரி 18 மணித்தியாலங்கள் வரை வேலைவாங்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கான போதிய சம்பளங்களையோ, குடியிருப்பு வசதிகளையோ, சுகாதார வசதிகளையோ, அவர்களது பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளையோ, அந்த முதலாளி வர்க்கம் வழங்கவில்லை.

இந்த மோசமான நிலைமைகளை மாற்றி, தமக்கு ஒரு குறைந்தபட்ச நல்ல வாழ்க்கை நிலைமைகளையாவது உத்தரவாதம் செய்யக் கோரியே, சிக்காக்கோ தொழிலாளர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அமெரிக்க முதலாளி வர்க்கம், அந்தத் தொழிலாளர்களின் ஒரு சில கோரிக்கைகளைக் கூட வழங்க மறுத்ததுடன், நிராயுதபாணியாகப் போராடிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, பல தொழிலாளர்களைக் கொன்று, பலரை காயங்களுக்குள்ளாக்கியது.

முதலாளிகளின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கை, அனைத்துத் தொழிலாளர்களினதும் கோபாவேசத்தை மேலும் மேலும் கிளறிவிட்டது. எஞ்சி நின்ற தொழிலாளர்கள், தமது உடைகளை தமது தோழர்கள் சிந்திய குருதியில் தோய்த்து எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடினர்.

தனது உயிருக்கு உயிரான தோழர் கார்ல் மாக்ஸ் மரணித்துவிட்ட சூழ்நிலையில், சிக்காக்கோ தொழிலாளாகளின் இந்த வீரஞ்செறிந்த போராட்டத்துக்கு, உலகத் தொழிலாளர்களின் ஆசானாக அன்று இருந்த ஏங்கெல்ஸ் தமது மனப்பூர்வமான ஆதரவை வழங்கியதுடன், 1893இல் பாரிசீல் கூடிய இரண்டாவது சர்வதேச அகிலத்தின் மூலம் அந்தத் தினத்தை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சர்வதேச தினமாக வருடாவருடம் நினைவுகூர வேண்டுமெனவும் பிரகடனம் செய்தார்.

அதுமாத்திரமின்றி, சிக்காக்கோ தொழிலாளி வர்க்கம் சிந்திய குருதியில் உதித்த செங்கொடியே, இனிமேல் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் கொடியாக இருக்க வேண்டும், இருக்கும் எனவும் பிரகடனம் செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை, அத்தினம் உலகத் தொழிலாளி வர்க்க தினமாக, மேதினமாக நினைவு கூரப்படுவதுடன், செங்கொடியே தொழிலாளி வர்க்கத்தின் கொடியாகவும் இருந்து வருகின்றது.

சிக்காக்கோ தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் முழு அமெரிக்க தொழிலாளர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்த இலட்சோப லட்சம் தொழிலாளர்களையும் தம்மைச் சுரண்டுகின்ற முதலாளி வர்க்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தது.

ஏகாதிபத்தியவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல காலனி நாட்டு மக்களையும,; தேசிய விடுதலைப் போராட்டங்களில் குதிக்க வைத்தது. இந்தப் போராட்டங்கள் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பின்னரே, பல நாடுகளில் தொழிலாளர்கள் தமது பல உரிமைகளைப் படிப்படியாகப் பெறமுடிந்தது. இன்று பல நாடுகளில், தவிர்க்க முடியாதபடி, மே தினம் விடுமுறை தினமாக இருப்பதற்குக் கூட, தொழிலாள வர்க்கம் நீணடதூரம் போராட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதிலும் கூட ஒரு வேதனையான விடயம் என்னவெனில, எந்த அமெரிக்க நாட்டில் மேதினம் பிறந்ததோ, அந்த அமெரிக்காவிலும், முழு வட அமெரிக்கக் கண்டத்திலும், இன்றும் கூட மேதினம் விடுமறையாக்கப்படாத நிலையே தொடர்கின்றது.

மேதினத்தன்று வட அமெரிக்கத் தொழிலாள வர்க்கம், சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் கைகோர்க்கக்கூடாது என்பதற்காக, இந்த நாடுகளில் பிறிதொரு தினத்தை ‘தொழிலாளர் தினம்’ என்ற பெயரில் விடுமுறை தினமாக்கி, தமது தொழிலாளி வர்க்க விரோத நிலைப்பாட்டை இந்த நாடுகளிலுள்ள ஏகபோக முதலாளி வர்க்கம் நிலைநாட்டி வருகின்றது.

இந்தப் போராட்டங்களின் உச்சக் கட்டமாகவும், வெளிப்பாடாகவும் 1917ல் ரஸ்யாவில் மகத்தான தலைவர் விலாடிமிர் இலிச் லெனின் தலைமையில், தொழிலாளி வர்க்கப் புரட்சி அரங்கேறியது. அந்தப் புரட்சியின் மூலம் உலகின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பில், தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப்படையான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், சோசலிச அரசொன்று உருவானது.

அந்த அரசு சோவியத் நாட்டை சகலவிதமான அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்ததுடன், அந்நாட்டில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் சிறைக் கைதிகள் போல் வாழ்ந்து வந்த சகல சிறுபான்மைத் தேசிய இனங்களையும் விடுதலை செய்தது.

தொழிலாளர்களும், விவசாயிகளும், இதர உழைப்பாளி மக்களும் அனுபவித்து வந்த துயரங்களுக்கு முடிவு கட்டப்பட்டு, அவர்கள் நாட்டின் எஜமானர்கள் ஆனார்கள். சோசலிச சோவியத் அரசின் கீழ,; தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணித்தியாலயங்களாகக் குறைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தகுந்த ஊதியமும் வழங்கப்பட்டது. உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்கப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு அம்சங்கள் சகலருக்கும் இலவசமாக்கப்பட்டது. 55 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், வயோதிபர்களுக்கு இலவச ஓய்வுகால விடுதிகள் அமைக்கப்பட்டன. வீடுகள், நீர், மின்சாரம், சமையல் வாயு, போக்குவரத்து என்பன மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டன.

சுருக்கமாகக் கூறின், ஒவ்வொரு சோவியத் பிரஜைக்கும் வாழ்க்கையும், பாதுகாப்பும் மிகச் சிறந்த முறையில் உத்தரவாதம் செய்யப்பட்டது. அதன் மூலம் சோசலிச அமைப்பிலான வாழ்க்கை முறைமையின் மேன்மை உலக அரங்கில் நிலைநிறுத்தப்பட்டது.

சோவியத் அரசின் இந்த சாதனைகள், முதலாளித்துவ உலகை, குறிப்பாக மேற்குலகை பாரதூரமான முறையில் உலுக்கியது. பல நாடுகளில் தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும், சோவியத் மக்களுக்கு கிடைத்துள்ளது போன்ற சிறந்த வாழ்க்கை நிலைமைகள் தமக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இதைக்கண்டு பயந்த முதலாளித்துவ நாடுகளின் ஆட்சியாளர்கள், தமது நாடுகளிலும் சோவியத் யூனியனில் ஏற்பட்டது போன்ற கிளர்ச்சிகள் தோன்றி, தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி விடுமோ என்ற அச்சத்தால், தமது நாடுகளிலும் மக்களுக்கு சில சமூக நலத்திட்டங்களை வழங்கி, நிலைமையைச் சரிக்கட்ட வேண்டி ஏற்பட்டது.

இன்று வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள், வளர்முக நாடுகளின் மக்களைவிட கூடுதலான வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதற்கு, கால் கோள் இட்டவர்கள், நாம் இன்று நினைவு கூரும் மேதினத்துக்கு வழிவகுத்த சிக்காக்கோ தொழிலாளர்களும், ரஸ்யாவில் புரட்சியின் மூலம் சோசலிச அரசை உருவாக்கிய சோவியத் தொழிலாளர்களும் தான் என்பதை, நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமானது.

தொழிலாளர்கள் முன்பு நினைவு கூருவதற்குக் கூட, அனுமதி மறுக்கப்பட்டிருந்த மே தினத்துக்கு விடுமறை வழங்கிய நிகழ்வாகும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எமது தாய் நாடான இலங்கை மணித்திருநாட்டின் மீது சற்று பார்வையைச் செலுத்துவோம். இலங்கை 1948 பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திரம் பெறும் வரை, எமது நாட்டைக் கைப்பற்றி அரசாண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், எமது நாட்டுத் தொழிலாளி வர்க்கம் சுதந்திரமான முறையில் மே தினத்தை நினைவு கூருவதைப் பல்வேறு வழிகளிலும் தடுத்தே வந்தனர்.

1935இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியும், பின்னர் 1943ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மேதினத்தை நினைவு கூர்ந்து வந்தன. தொழிலாளர்கள், முதலாளிகளின் அனுமதி மறுப்பை மீறியே, மேதினக் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அவற்றில் கலந்து கொண்டமைக்காக, பல தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, முதலாளிகளால் பழி வாங்கப்படவும் செய்தனர்.

பிரித்தானிய காலனி ஆட்சியாளர்களின் கொடுமையான சுரண்டல், அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராக, 1947ல் அரசாங்க, தனியார்துறை ஊழியர்கள், வீரஞ்செறிந்த நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் ஒன்றில் குதித்தனர். உழைக்கும் வர்க்கத்தின் இந்த நியாயமான போராட்டத்தைப் பொறுக்க முடியாத பிரித்தானிய ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம், தனது பொலிசை ஏவி வேலைநிறுத்தக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்தியது.

அதில் கந்தசாமி என்ற, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த, அவரது உழைப்பில் தமது எதிர்கால வாழ்ககையை அமைத்துக் கொள்ளக் காத்திருந்த ஐந்து சகோதரிகளுடன் உடன் பிறந்த, அரசாங்க எழுதுவினைஞர் ஒருவர் பலியாகித் தியாகியானார்.

போராட்டம் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசால், துப்பாக்கி முனையில் முறியடிக்கப்பட்ட போதும், இலங்கையின் உழைப்பாளி வர்க்கம், தனது உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பை உலக அரங்கின் முன்னால் பறைசாற்றி நின்றது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி, இன்றும் நீடித்து வருவதை, இலங்கை மக்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் எடுத்து வந்த தொடர்ச்சியான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

பிரிட்டிஸ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் தான் இந்த நிலைமை என்றில்லை. பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திர இலங்கையின் முதலாவது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, தரகு முதலாளிகளின் கட்சியான ஐக்கிய Nதிசியக் கட்சியின் ஆட்சியின் போதும், மேதினத்தை இலங்கைத் தொழிலாளி வர்க்கம் விடுமுறை தினத்துடன் கொண்டாட அக்கட்சி அனுமதிக்கவில்லை.

மேதினத்தை விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தும்படி இடதுசாரித் தொழிற்சங்கங்கள் கோரியபோது, ‘மேதினம் என்பது ஒரு வெளிநாட்டுப் பிரச்சினை, அதற்கு இலங்கையில் விடுமுறை விடமுடியாது’ என டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான பிற்போக்கு ஐ.தே.க அரசு காரணம் கூறி நிராகரித்துவிட்டது. டி.எஸ்.சேனநாயக்க காலஞ்சென்ற பிறகு, 1952இல் பதவிக்கு வந்த அவரது மகன் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசும், தந்தையின் வழியைப் பின்பற்றியே நடந்து கொண்டது.

டட்லியின் அரசு, ஏகாதிபத்திய உலக வங்கியின் ஆணையை ஏற்று, அப்போது அவ்வரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த, பிற்காலத்தில் ‘அமெரிக்க யங்கி டிக்கி’ என்ற அவமானப் பெயரைச் சுமந்து நின்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன மூலம், மக்களின் வாழ்க்கையுடன் விளையாட முயன்றது.

அவர்கள் ஏகாதிபத்திய நிதி நிறுவனமான உலக வங்கியின் ஆணையை ஏற்று, மக்களுக்கு வழங்கி வந்த இலவச அரிசி மானியத்தை வெட்டியதுடன், பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய போசனமாக வழங்கப்பட்டு வந்த இலவச பணிசையும் நிறுத்தினர். அதுமட்டுமின்றி தபால், தந்தி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களையும் உயர்த்தினர்.

ஐ.தே.க அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை முழுநாட்டு மக்களினதும் பெரும் எதிர்ப்பையும், கோபாவேசத்தையும் கிளறிவிட்டது. ஐ.தே.க அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசத்துக்கு, இடதுசாரித் தொழிற்சங்கங்கள் செயல்வடிவம் கொடுக்க முன்வந்தன. 1953 ஆகஸ்ட் 12ஆம் திகதி நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கும், மாபெரும் ‘ஹர்த்தால்’ நடவடிக்கையொன்றுக்கும் அவை அழைப்பு விடுத்தன.

தொழிற்சங்கங்களின் அழைப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட அரச, தனியார்துறை ஊழியர்கள் பொதுவேலைநிறுத்தத்தில் முழுமையாகக் குதித்ததுடன், பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அரச காரியாலயங்கள் எதுவும் இயங்கவில்லை. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து, தபால் சேவை எதுவும் நடைபெறவில்லை. முழு நாடும் பூரண ஸ்தம்பித நிலையை அடைந்தது.

ஐ.தே.க அரசால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இயலவில்லை. அரசாங்கம் பிரகடனம் செய்த அவசரகாலச் சட்டத்தையும், ஊரடங்குச் சட்டத்தையும் மக்கள் ஊதாசீனம் செய்து மக்கள் வீதிகளில் கூடியதுடன், அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர். பொலிசாரும், இராணுவத்தினரும் மக்களின் எதிர்ப்பை மீறி, அரசாங்கத்தின் உத்தரவுகளை அமுல்படுத்த முடியாது திண்டாடினர்.

அரசாங்கம் தனது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட, நாட்டின் எந்தப் பகுதியிலும் நடாத்த முடியாத ஒரு சூழ்நிலை தோன்றியது. இறுதியில் அரசாங்கம் பாதுகாப்புக் கருதி தனது மந்திரிசபைக் கூட்டத்தை, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற பிரிட்டிஸ் யுத்தக் கப்பல் ஒன்றில் நடாத்தியது. அதன்பின்னர் பாராளுமன்றம் வந்த பிரதமர் டட்லி சேனநாயக்க, அங்கு மயங்கி விழுந்ததுடன், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தான் இனிமேல் அரசியலுக்குத் திரும்பப் போவதில்லை எனக் கூறிவிட்டு, நாட்டைவிட்டும் வெளியேறினார்.

இந்த மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தின் வெற்றி, இலங்கைத் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் சக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டியதுடன், அது தனது வரலாற்றில் ஈட்டிய மிகப்பெரும் வெற்றியாகவும் இருந்தது. இடதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் ஐ.தே.கட்சியிலிருந்து விலகி, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாநாயக்கா புதிதாகத் தொடங்கியிருந்த, சிங்கள தேசியவாதக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சிiயும் கலந்து கொண்டது.

பிற்போக்கு ஐ.தே.கவின் தமிழ்ப்பகுதிப் பதிப்பாகத் திகழ்ந்த, தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, கு.வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோர் தொடங்கியிருந்த, தமிழ் தேசியவாதக் கட்சியான தமிழரசுக் கட்சியும் கலந்து கொண்டது. அதாவது ஏகாதிபத்தியத்துக்கும், அதன் அடிவருடியான ஐ.தே.க அரசுக்கும் எதிரான இந்தப் போராட்டத்தில், இடதுசாரிகள் மட்டுமின்றி, சிங்கள – தமிழ் தேசியவாத சக்திகளும் பங்குபற்றியதன் காரணமாகவே, இந்தப் போராட்டம் பூரண வெற்றியை ஈட்டியது.

அன்று மட்டும் இடதுசாரிச் சக்திகள் தயார் நிலையில் இருந்திருந்தால், இந்த வெற்றிக் கனியை, இலங்கையில் ஒரு சோசலிச அரசை அமைப்பதில் கொண்டு சென்று பூரணப்படுத்தியிருக்க முடியும். ஆனால் இந்த ஹர்த்தால் போராட்டத்தின் வெற்றியை, 1956இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம், அமோக வெற்றி பெற்றதன் மூலம் அறுவடை செய்து கொண்டது.

அத்தேர்தலில் ஐ.தே.க மக்களால் நிராகரிக்கப்பட்டு, ஆக எட்டு ஆசனங்கள் மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. பண்டாரநாயக்காவின் புதிய அரசாங்கம் மக்களின் மனநிலையை விளங்கிக் கொண்டு, பல ஏகாதிபத்திய விரோத, மக்கள் நல நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது. அதில் ஒன்றாக இலங்கையில் முதன்முதலாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாக மேதினம் பிரகடனப்படுத்தப்பட்டு, தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் இதர கோரிக்கைகளான எட்டு மணி நேர வேலை, நியாயமான அடிப்படைச் சம்பள நிர்ணயம், சுகவீன விடுமுறை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, தொழில் நீதிமன்றங்கள், சம்பள நிர்ணய சபைகள், ஊழியர் சேமலாப நிதி போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் பண்டாரநாயக்கவின் அரசு நிறைவேற்றி வைத்தது.

அதன் பின்னரே, அதுவரை காலமும் இடதுசாரிகளினால் மட்டும் செங்கொடியுடன் நினைவுகூரப்பட்டு வந்த மேதினத்தை, இதர கட்சிகளும் தத்தமது பலவர்ணக் கொடிகளுடன் ‘கொண்டாட்டமாக’ நடாத்த ஆரம்பித்தனர். பண்டாரநாயக்கவின் சிறீலங்கா சுதந்திரக்கட்சி மேதினத்தை தனது நீல நிறக் கொடியுடன் கொண்டாடியது மட்டுமின்றி, பெருமுதலாளிகளின் கட்சியான ஐ.தேக. தனது பச்சைக் கொடியுடனும், தொழிலாளி வர்க்கத்தை மொழிவழித் தொழிற்சங்கம் என்ற போர்வையில் இனரீதியாகக் கூறுபோட்ட தமிழரசுக் கட்சி தனது மூவர்ண ‘டெக்னிக் கலர்’ கொடியுடனும் கொண்டாடத் தொடங்கின.

அதுமட்டுமின்றி, பிற்போக்கு கிறிஸ்தவ மதவாத சக்திகள், ‘கிறிஸ்தவ தொழிலாளர் மேதினம்’ எனவும் கூட, தொழிலாளர்களைக் கூறுபோட முயன்றனர். மலையகத்தில் ஏகாதிபத்திய பணத்தில் வயிறு வளர்க்கும் சில அரசசார்பற்ற அமைப்புகள், பெண் தொழிலாளர்களுக்கான மேதினம் என்ற போர்வையிலும் தொழிலாளி வர்க்கத்தைக் கூறுபோட முயன்றன.

ஐ.தே.க ஒருபுறத்தில் தொழிலாளர்களை ஏமாற்ற மேதினக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் வருடாவருடம் நடாத்தினாலும், அது ஆட்சியில் இருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதை வரலாற்றை உற்று நோக்கினால் தெரிந்து கொள்ள முடியும்.

உதாரணத்துக்கு, 1980ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க ஆட்சிக்காலத்தில், அவரது ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது, அரச – தனியார்துறை ஊழியர்கள் பொதுவேலைநிறுத்தம் ஒன்றில் இறங்கிய பொழுது, அவர்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்த அரசு, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது. அவர்களில் பலர் பின்னர் வறுமையில் வாடி, தற்கொலை செய்து தமது வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலைக்குக் கூடச் சென்றனர்.

அதுமட்டுமின்றி, தொழிலாளர்கள் மேதின கூர்வலங்கள், கூட்டங்களில் பங்குபற்றுவதைத் தடுப்பதற்காக, 1965ல் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைத்திருந்த டட்லி தலைமையிலான ஐ.தே.க அரசு, மேதினத்தன்று நாடு முழுவதிலுமிருந்த சினிமா தியேட்டர்களில் அரசாங்கச் செலவில் திரைப்படங்களை இலவசமாக திரையிட ஏற்பாடு செய்து, தொழிலாளர்கள் மேதின நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுக்கவும் முயன்றது.

இந்தியாவிலிருந்து பெரும் பணச் செலவில் திரை நட்சத்திரங்களைக் கொண்டு வந்து கொழும்பு காலிமுகத் திடலில் களியாட்டங்களையும் நடாத்தியது. அதுமட்டுமின்றி தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகள் ஐ.தே.க அரசுடன் இணைந்திருந்த காலத்தில், அந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கி வந்த இலவச அரிசி மானியத்தை வெட்டி, ரூபாயின் மதிப்பைக் குறைத்து, கட்டுப்பாடற்ற இறக்குமதிக் கொள்கையை அமுல்படுத்தி, மக்களின் வயிற்றில் அடித்த போது, அதற்கு தமிழ் கட்சிகள் இரண்டும் பூரண ஆதரவளித்தனர்.

வடக்கில் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய போது, பொலிசை ஏவி அம்மக்களை மிருகத்தனமாகத் தாக்கவும் தூண்டினர். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் இவ்விரு தமிழ் கட்சிகளுக்கும் எழுந்த எழுந்த எதிர்ப்புக் காரணமாக, வடக்கில் 1966ஆம் ஆண்டு மேதினத்தைக் கொண்டாட அஞ்சிய அவ்விரு கட்சிகளும், அவ்வாண்டு யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதின நிகழ்வுகளை நடாத்தக் கூடாது என பொலிசாரின் மூலம் தடை விதித்தனர்.

எமது புரட்சிகர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பொலிஸ் தடையையும் மீறி, யாழ்பாணத்தில் மேதின ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் நடாத்தியது. மேதின நாளுக்கு முதலும், மேதினத்தின் அன்றும் பொலிசார் எமது தோழர்களை மிருகத்தனமாகத் தாக்கி, பல தோழர்களைக் கைதுசெய்த போதும், நாம் திட்டமிட்டபடி ஊர்வலத்தையும், கூட்டத்தையும் நடாத்தினோம்.

ஐ.தே.க – தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கூட்டரசாங்கம், 1969ம் ஆண்டு பௌத்த மக்களின் வெசாக் தினமும், மேதினமும் ஒரே நாளில் வருவதைக் காரணம் காட்டி, அவ்வருடம் மேதின நிகழ்வுகளுக்கு நாடு முழுவதும் தடை விதித்தது. அவ்வாண்டும் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தடையை மீறி கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேதின ஊர்வலங்களையும், கூட்டங்களையும் நடாத்தியது.

பொலிசாரின் கைது நடவடிக்கைகளும், தாக்குதல்களும் நடந்த போதும், தொழிலாளி வர்க்கம் பின்வாங்கவில்லை. இந்த நிகழ்வுகளின் போது, சிக்காக்கோ தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, எமது இலங்கையின் சிங்கள – தமிழ் – முஸ்லீம் தொழிலாளி வர்க்கமும் இரத்தம் சிந்தியது என்றால் அது மிகையாகாது. புpற்போக்கு ஐ.தே.க – தமிழரசு – தமிழ் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் இந்த நிலைமை என்றால், விடுதலைக்குப் போராடுவதாகப் புறப்பட்ட புலிகளின் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகவே இருந்தது. யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் ஏனைய இயக்கங்களும் தடையின்றி இயங்கிய காலத்தில், இடதுசாரிகளின் தலைமையில் செயற்பட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஒரு பலம் வாய்ந்த போராட்ட அமைப்பாக இருந்தது.

1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசு மேற்கொண்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டுமின்றி, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தேசிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஆரம்ப காலத்தில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியே போராட்டங்களை முன்னெடுத்து வந்தது.

அதன் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் புலிகள் ஒழுங்கு செய்த மேதின ஊர்வலங்களைவிட, தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஒழுங்கு செய்த ஊர்வலங்களிலேயே அதிகளவு மக்கள் பங்குபற்றினர். இதனால் ஆத்திரமடைந்த புலிகள் இனிமேல் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி தனியாக மேதின நிகழ்வுகளை நடாத்தக்கூடாது எனவும், தம்மால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளிலேயே பங்குபற்ற வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தனர். அதை தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி நிராகரித்த போது, அது எதிர்காலத்தில் மேதின நிகழ்வுகளை நடாத்தக்கூடாது என தடை விதித்து, தமிழ் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமையைப் பறித்தெடுத்தனர். அதுமட்டுமின்றி, புலிகள் 1995ல் யாழ்.குடாநாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வன்னி நிலப்பரப்புக்கு ஓடிய பின்னர், யாழ்ப்பாணத்தில் எமது இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த மேதினக்கூட்டம் ஒன்றை நடைபெறவிடாது தடுப்பதற்காக, கூட்ட மண்டபம் வழங்கியவர்களை மிரட்டி அக்கூட்டத்தை நடைபெறவிடாது தடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் வங்கி ஊழியர் சங்கத் தலைவராக இருந்து, பின்னர் ஓய்வுபெற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, புலிகளின் பிரதிநிதி ஒருவருக்கு வழிவிடுவதற்காக ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, அதன் பின்னரும் கூட, புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கிங்ஸ்லி இராசநாயகத்துக்கு, யாழ்பாணத்திலுள்ள வங்கி ஊழியர்கள் ஒரு அஞ்சலிக் கூட்டத்தை ஒழுங்கு செய்த போது, அதையும் கூட நடைபெறவிடாது புலிகள் தடை போட்டனர். இவ்வாறு தான் தமிழ் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகவும், உழைப்பாளி மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் கட்சிகளின் வழக்கறிஞர்கள் ஒரு பக்கத்தில் தொழிலாளர்களைப் பிரிக்க மொழிவழித் தொழிற்சங்கங்களை நடாத்திக் கொண்டு, மறுபக்கத்தில் தொழில் நீதிமன்றங்களில் முதலாளிகள் சார்பாக வழக்காடி வந்தமைக்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூறமுடியும். தமிழ் தலைiமைகளின் தொழிலாள விரோத, மக்கள் விரோத செயல்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு நூறு மேதினக் கூட்டங்கள் கூடப் போதாது. ஆனால் எது எப்படியிருந்த போதிலும், இன்று எமது பொன்னான தாயகத்தில் மீண்டும் மக்களுக்குச் சாதகமான ஒரு சூழல் தோன்றியுள்ளது. ஏகாதிபத்தியத்துக்கும், பெருமுதலாளிகளுக்கும் சார்பான ஐ.தே.க தலைமையிலான பிற்போக்கு சக்திகள், அடுத்தடுத்து ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல வடக்கு கிழக்கில் ஏகாதிபத்திய அனுசரணையுடன் பிற்போக்குவாத பிரிவினைவாதப் போராட்டத்தையும், எதேச்சாதிகார வெறியாட்டததையும் நடாத்தி வந்த புலிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவிதமான ஜனநாயக உரிமைகளும் இன்றி, வாயில்லாப் பூச்சிகளாக வாழ்ந்து வந்த தமிழ் தொழிலாளி வர்க்கத்துக்கும் மக்களுக்கும் ஒரு ஜனநாயக இடைவெளி கிடைத்துள்ளது. தமிழ் மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றியை, அரிய வாய்ப்பை, இலங்கைத் தொழிலாளி வர்க்கமும், அனைத்து மக்களும் சரியான முறையில் பயன்படுத்தி, தமது எதிர்கால உரிமைப் போராட்டங்களை வர்க்க அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும். சர்வதேச ரீதியாகவும் இன்று சிறப்பான நிலைமைகள் உருவாகி வருகின்றன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தற்காலிக பின்னடைவை எதிர்நோக்கியிருந்த உலக சோசலிச சக்திகள், உலக முதலாளித்துவ நெருக்கடியினதும், அதன் கையாலாகத்தனத்தின் காரணத்தாலும், மீண்டும் உலக அரசியல் அரங்கின் மையப்பகுதிக்கு வர ஆரம்பித்துள்ளன. எனவே தோழர்களே! இந்த உன்னதமான மேதின நினைவு நாளில், உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உன்னத ஆசான்களான மாக்ஸ்சும் ஏங்கெல்ஸ்சும், தமது உலகப் புகழ்பெற்ற பெற்ற ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யில் குறிப்பிட்ட பிரசித்தி பெற்ற வாக்கியங்களைக் கூறி, எனது பேச்சை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

‘தொழிலாளி வர்க்கத்திற்கு இழப்பதற்கு தனது உழைப்பைத் தவிர வேறு எதுவுமில்லை, ஆனால் வெல்வதற்கோ ஒரு உலகம் காத்திருக்கின்றது’. உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர மேதின வாழ்த்துக்கள். இதுவரை நேரமும் எனது பேச்சை பொறுமையுடன் செவிமடுத்த அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: