‘தமிழில் தேசிய கீதம் பாடுவது நகைச்சுவை’ சிறுபான்மை இனத்தின் மீதான இலங்கை அரசின் மனிதாபிமான நெருக்கடி

14 12 2010

ஓவ்வொரு தனி மனிதன் அல்லது ஒரு சமூகம் தமது தாய் நாட்டின் மீதிருக்கும் தேசிய உணர்வை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டதே தேசிய கீதம். இவை எந்த மொழியில் பாடப்பட வேண்டும் என்பது தொடர்பில் இது வரை காலமும் எந்த வொரு நாட்டிலும் கொள்கைகளோ அல்லது சட்ட வரையறைகளோ இல்லை.


எல்லா விடயங்களிலும் ஏனைய நாடுகளை விட வழமைக்கு மாறாக செயற்படும் ஜனாதிபதி மஹிந்த அவர்களும் அவரது அமைச்சரவையும் வினோதமான வழக்காறுகளை இனம் மதம் மொழி சமூகம் தாண்டி தற்போது தேசிய கீதத்திலும் புகுத்தி விட்டனர். மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலகட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணித்து தமிழ் மக்களை அவர்களது கலாசாரத்தினை திட்டம் இட்டு படுகொலை செய்யும் செயற்பாடாகும்.

இலங்கையில் பெரும்பான்மை மக்களின் அடுத்த மொழியாக தமிழ் மொழியே உள்ளது. தமிழ் இனம் என்பதையும் தாண்டி தமிழ் மொழி என்பது தான் இலங்கையில் தமிழர்கள் தவிர்ந்த முஸ்லிம் , பறங்கி இனத்தவர்களுக்கும் புழக்கத்தில் உள்ள ஒரு மொழியாகும்.

இந்தியாவில் தேசிய கீதம் இந்தி மொழியில் எழுதப்பட்டு அதே மொழியிலேயே பாடப்படுகின்றது ஆகவே எமது தேசிய கீதமும் சிங்களத்தில் அமைய வேண்டும் என உதவாக் கரை காரணம் ஒன்றையும் எமது தலைமைத்துவம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் என்ற நிலையிலும்.  தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவில் வங்காள மொழியில் தான் தேசிய கீதம் உள்ளது. ரவீந்திரநாத் தாகூர் என்ற சிறுபான்மை வங்காள இனத்தை சேர்ந்த ஒருவரே இந்தியாவின் தேசிய கீதத்தினை எழுதியுள்ளார்.  அது சரி சொந்த வீட்டில் என்ன நடக்கின்றது என்பது கூட அறியாது இருக்கும் எமது தலைமைத்துவங்களுக்கு எதிர் வீட்டு விவகாரங்கள் மட்டும் தெரிந்திருக்குமா என்ன?

எமது நாட்டைப் போன்று யுத்த சீரழிவுகள் அங்கு பாரியளவில் இடம் பெறாத காரணத்தினாலும் இந்தி மொழிப்பாவனை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற காரணத்தினாலும் தான் அங்கு ஹிந்தி மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. ஆங்கெல்லாம் தேசிய கீதம் பாடுவதும் கேட்பதும் வரப்பிரசாதமாக ஏற்று அதற்குரிய மரியாதை  வழங்கப்படுகிறது.

எமது நாட்டில் ஜனாதிபதி பதவி ஏற்கவும் அமைச்சரவை பதவி ஏற்கவும் பாராளுமன்றத்தில் அவர்கள் நடனம் ஆடவும் பாராளுமன்ற அவையை குழப்பவும் என ஒரு வினோத பாடலாக அல்லவா தேசிய கீதம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் தலைமைத்துவமே நாட்டின் மீது உணர்வற்ற தன்மையில் இருக்கும் போது அதனை எந்த மொழியில் பாடினால் தான் என்ன?

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது நகைச்சுவை என கூறிய விமல் வீரவன்ச உள்ளிட்ட தலைவர்களுக்கு சிங்களத்தில் தமது மொழியில் முழுமையான தேசிய கீதம் தெரியுமா என்ன?

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7ஆம் அட்டவணை 3இல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு 1988 ஆம் ஆண்டு தான் தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டச் செய்யும் வண்ணம் ‘சிங்கள தேசிய கீதம்’ என்ற கொள்ளைக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகவும் பழமையான தேசிய கீதம், ஜப்பான் நாட்டின் தேசிய கீதமாகும். 4 வரிகள் மட்டுமே உள்ள இந்த தேசிய கீதம் 9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும். ஜப்பானின் வரலாற்றில், அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டாலும், தேசப்பற்றுள்ள ஜப்பான் தமது தேசிய கீதத்தில், எந்தவித மாறுதலையும் செய்யவில்லை.

இரண்டு உலகப் போர்களில் பங்கு பெற்ற நேரங்களிலும், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டால், அடியோடு தகர்க்கப்பட்ட போதும், ஷிண்டோ, புத்த சமயம் என பிரிவுகள் இருந்தாலும், அவற்றுக்கென வழிபாட்டு பாடல்கள் இருந்தாலும், ஜப்பானியர்கள் தங்களின் பழமையான தேசிய கீதத்திற்குத் தான், மிகவும் முக்கியத்துவம் தருகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே, ஜப்பானில் தேசிய கீதம் கற்றுத் கொடுக்கப்படுகின்றது.

தவிர கனடாவில் மூன்று மொழிகளிலும், சுவிஸ்ஸர்லாந்தில் நான்கு மொழிகளிலும், தென் ஆபிரிக்காவில் ஐந்து மொழிகளிலும் என தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: